Home

Saturday 18 November 2017

வெங்கட் சாமிநாதன் - சில பொழுதுகள் சில நினைவுகள்






கலாப்ரியாவின் பழைய கவிதையொன்றில் படித்த ’மைக்கறை பற்றிக் கவலைப்படாத பேனா ரிப்பேர்க்காரன்’ என்னும் வரி நினைவில் படர்கிறது.    நமது இலக்கியம், பண்பாடு, கலைகள், மொழி ஆகியவை அனைத்தும் மேன்மையுறும் கனவுகளோடும் அக்கறையோடும் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக தன் கருத்துகளை முன்வைத்து வாதாடி வந்த வெங்கட் சாமிநாதனோடு இணைத்துப் பார்க்க முற்றிலும் பொருத்தமான வரியாகவே அதை நினைக்கிறேன். அவர் எதிர்பார்த்ததுபோலவே தமிழ்ச்சூழல் அவரைப் புறக்கணித்தது. கடுமையாக வசைபாடியது. அதனால் அவர் வேதனை அடைந்ததுண்டு. ஆயினும் அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல் தான் நினைத்த உயர்ந்த மதிப்பீடுகளைப்பற்றி இறுதி மூச்சுவரைக்கும் இடைவிடாமல் பேசியும் எழுதியும் வந்தார். அவர் கைகள் மைக்கறையால் அழுக்கடையாத நாளே இல்லை. ஆனால் அவர் அதை ஒரு பிரச்சினையாகக் கருதியதே இல்லை.  பழுது நீக்குபவனின் தீவிரத்தோடும் அக்கறையோடும் இடைவிடாமல் அவர் செயல்பட்டபடியே இருந்தார்.


மேலான ரசனையுணர்வு நம்மை மேன்மையை நோக்கிச் செலுத்தும் அடிப்படை விசை. அதை இழப்பதும் அல்லது தரம்பிரித்துப் பார்த்து தகுதியானதை முன்வைக்கத் தெரியாமல் தவிர்ப்பதும் நாம் குடியிருக்கும் வீட்டில் நாமே குப்பைகளைக் கொண்டுவந்து நிறைப்பதற்கு இணையான செயல்கள். வெங்கட் சாமிநாதனுடைய அனைத்து விமர்சனங்களிலும் விவாதங்களிலும் இந்தச் சரடு அடியோட்டமாக இருந்தது.

தொடக்கத்தில் பலரைப் போல நானும் அவருடைய பார்வையை ஒருவித ஐயத்தோடு அணுகி, அசைபோட்டு, கசந்து விலகிநின்றவனே. தற்செயலாக அவருடன் உரையாடக் கிட்டிய தருணங்களின் வழியாக என் ஐயங்கள் விலகின. அவருடைய விருப்பத்தின் அடிப்படையாக இருந்த கனவுக்கும் என் மனம் சுமந்த கனவுக்கும் பெரிய வேறுபாடெதுவும் இல்லை என்பதை மெல்ல மெல்லப் புரிந்துகொண்டேன். அன்று தொடங்கிய நட்பும் பகிர்தலும் கால்நூற்றாண்டுக்கும் மேல் தொடர்ந்தன.   
அவர் உயிருடன் இருந்த காலத்தில் அவர் எழுதிய பல கட்டுரைகளை ஒட்டி வெகுநேரம் பேசியிருக்கிறேனே தவிர, அவற்றைப்பற்றி எழுதத் தோன்றியதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில் திலீப்குமார் தொகுத்த தொகுப்புக்காக ஒரு சிறு கட்டுரையை மட்டுமே எழுதியிருக்கிறேன். அவரிடமே நேரில் சொல்லிவிட்டோமே, பிறகென்ன  வேண்டும் என்கிற எண்ணமே தடையாக அமைந்துவிட்டது போலுமென இப்போது தோன்றுகிறது. அவர் மறைவை ஒட்டி எழுதிய அஞ்சலிக்கட்டுரையே அவரைப்பற்றி நான் எழுதிய முதல் விரிவான கட்டுரை. அக்கட்டுரையை எழுதி முடித்த கணத்தில் இந்த உண்மை தைத்தது. ஏன் அப்படி இருந்தேன் என என்னை நானே நொந்துகொண்டேன். அப்படிப்பட்ட ஒரு கணத்தில்தான் தீராநதியிலிருந்து நண்பர் மணிகண்டன் அவரைப்பற்றி ஒரு தொடர் எழுத முடியுமா என்று கேட்டு மின்னஞ்சல் விடுத்திருந்தார். இயற்கை எனக்காகவே ஒரு வடிகாலை உருவாக்கிக் கொடுத்திருப்பதாக அந்த மின்னஞ்சலை அன்று இரவு நினைத்துக்கொண்டேன். தொடருக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு அன்று இரவே முதல் அத்தியாயத்தை எழுதினேன்.

பன்னிரண்டு மாதங்களில் பன்னிரண்டு கட்டுரைகள் வெளிவந்தன. ஒவ்வொரு கட்டுரையும் வெளிவந்ததும் முதல் அழைப்பு ராஜபாளையம் நரேந்திரகுமாரிடமிருந்து வந்துவிடும். வெங்கட் சாமிநாதனின் அடிப்படை விழைவைப் புரிந்துகொண்டவர் அவர். ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு கட்டுரையும் அவருடைய பழைய நினைவுகளைப் புரட்டிவிடுவதாகச் சொல்வார். ஒருமுறை நேர்ச்சந்திப்பில் ‘வெ.சா.வுடைய முக்கியமான நண்பர் இந்த ஊர்க்காரர். அவரைப் பார்ப்பதற்காகவே வெ.சா. ராஜபாளையத்துக்கு வந்திருக்கிறார்’ என்பதைப் பெருமையாகச் சொன்னார். அக்கணம் மலர்ந்த அவருடைய முகத்தின் சித்திரம் இன்னும் என் நினைவில் பதிந்துள்ளது. ஓர் இலக்கிய ஆளுமைக்கு வழங்கவேண்டிய மதிப்பை அந்த மலர்ச்சியில் என்னால் உணரமுடிந்தது. அவரைப்போலவே பல நண்பர்கள் இத்தொடரை விருப்பத்தோடு படித்தார்கள் என்பதை நேர்ச்சந்திப்பின் உரையாடல்கள் எனக்கு உணர்த்தின.

மெய்ப்பு பார்ப்பதற்காக பன்னிரண்டு கட்டுரைகளையும் ஒருசேரப் படிக்கும்போது பல கோணங்களில் நிற்கவைத்து எடுக்கப்பட்ட அவருடைய பல படங்கள் அடங்கியதொரு தொகுப்பைப் புரட்டிப் பார்க்கும் உணர்வை அடைந்தேன். அவருடைய விருப்பத்தையும் கனவையும் இக்கட்டுரைகள் இச்சமூகத்துக்குத் தெளிவுபடுத்தும் என்பது என் நம்பிக்கை. இந்த நூல் வெங்கட் சாமிநாதன் என்னும் முன்னோடிக்கலைஞனுக்கு என் எளிய சமர்ப்பணம்.


இக்கட்டுரைகளை எழுதத் தூண்டியவர் தீராநதி மணிகண்டன். அவருக்கு என் அன்பு கலந்த நன்றி. எப்போதும் என்னுடைய முயற்சிகளுக்கு அருந்துணையாக இருப்பவர் என் அன்பு மனைவி அமுதா. இந்தக் கட்டுரைகளை எழுதும் கட்டத்தில் பழைய குறிப்பேடுகள் தேவைப்பட்ட சமயத்திலெல்லாம் பரணில் ஏற்றப்பட்டுவிட்ட அட்டைப்பெட்டிகளிலிருந்தும் என் புத்தக அடுக்குளிலிருந்தும்  அலுப்பில்லாமல் தேடி எடுத்துக்கொடுத்தவர் அவர்தான்அவரையும் இத்தருணத்தில் நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன். இந்தத் தொகுதியை அழகான முறையில் வெளியிடும் நண்பர் சந்தியா நடராஜனுக்கு என் மனமார்ந்த நன்றி எப்போதும் உண்டு.